''வன்முறை அரசியல் கலாச்சாரத்தை தமிழக இளைஞர் காங்கிரசார் கைவிட்டு, கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த மூத்த தலைவர் ரமணிபாய் திருவுருவப் படம் திறப்புவிழா வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று வண்ணாரப்பேட்டையில் உள்ள ராமுண்ணி ரமணிபாய் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ரமணிபாய் உருவப்படத்தை திறந்து வைத்து பேசுகையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரசார் காழ்ப்புணர்வுடன் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கலாச்சாரம் நமக்கு வளர்ச்சியைத் தராது. கட்சியில் ஏற்பட்ட இந்த வன்முறை கலாச்சாரம் கண்டிக்கத்தக்கது. இளைஞர் காங்கிரசார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மேலிடப் பார்வையாளர் விசாரித்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழக இளைஞர் காங்கிரசார் வன்முறை அரசியல் கலாச்சாரத்தை கைவிட்டு கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். கட்சிக்கு தங்களது கடின உழைப்பை அர்ப்பணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.