தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை தாக்கிய சென்னை மாநகராட்சி உறுப்பினர் சைதை வில்லியம்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அருண்குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற வன்முறை காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. அகிம்சைதான் காங்கிரசின் கொள்கை. இதற்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தாக்குதல் சம்பவம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தென் சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் சைதை வில்லியம்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க குமரி அனந்தன், வடிவேலு, யசோதா ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்கட்சி பூசல் தமிழக காங்கிரசில் மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளிலும் உள்ளது. கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமார் கூறினார்.