கட்டாய கிராமப்புற சேவையை சட்டமாக்குவதை கண்டித்து நாளை (15ஆம் தேதி) முதல் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் வினோத், மோகன்ராஜ், தீபக் ஆனந்த், கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக ஒரு ஆண்டு கிராமப்புறங்களில் சென்று சேவை செய்ய வேண்டும் என்றும் அதற்காக படிப்பு காலம் ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அவரின் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம்.
பின்னர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் தலையீட்டால் மருத்துவ மாணவர்களுடன் அமைச்சர் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காணப்படும் என்றார். ஆனால் அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 7ஆம் தேதி நடைபெறம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கட்டாய கிராமப்புற சேவை திட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதுவரை கட்டாய கிராமப்புற சேவைத்திட்டம் பற்றிய தெளிவான அறிக்கையை அமைச்சர் அன்புமணி வெளியிடவில்லை.
எனவே கட்டாய கிராமப்புற சேவை திட்டத்திற்கான மசோதாவை தாக்கல் செய்வதை எதிர்த்து மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் 15ஆம் தேதி (நாளை) முதல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களும், தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்வார்கள்.
17ஆம் தேதி உண்ணாவிரதமும், அதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தவும், வகுப்புக்களை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம். தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இந்த பிரச்சினையில் தலையிட வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் தந்திகள் அனுப்ப முடிவெடுத்துள்ளனர். முதலமைச்சர் கருணாநிதி இந்த பிரச்சினையில் தலையிட்டு நல்ல தீர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.