''அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை ஓராண்டுக்கு இடிக்க தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் செல்லாது'' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னையில் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கு ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கும் வகையில் கடந்த ஜூலையில் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை எதிர்த்து நுகர்வோர் நடவடிக்கை குழு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அந்த மனுவில், அனுமதியில்லாத கட்டிடங்களை நியாயப்படுத்தும் முயற்சியிலும், கட்டிட உரிமையாளர்களை பாதுகாக்கவும் அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த பிரச்சினையில் செயல் இழந்த தன்மையை மறைக்க சட்டவிரோதமாக கட்டப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் இந்த அவசர சட்டத்தை அரசு பிறப்பித்துள்ளது. இது சட்டவிரோதமானதாகும். இந்த சட்டமானது சட்டத்தை மதித்து கட்டடங்களை கட்டியவர்களுக்கும், சட்டத்தை மீறி கட்டியவர்களுக்கும் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஏழைகள், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசு இந்த அவசர சட்டத்தை கொண்டு வந்ததற்கான காரணத்தை கூறுகிறது. பெரிய வர்த்தக கட்டடங்களை பாதுகாக்க திசை திருப்பும் வகையில் இவ்வாறு அரசு காரணத்தை கூறுகிறது. ஆகவே, சட்டவிரோதமான முறையில் அமைந்திருக்கும் இந்த அவசர சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமும், சென்னை மாநகராட்சியும் ஓராண்டுக்கு அமல்படுத்த வேண்டாம் என்று அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரையில் இந்த அவசர சட்டம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செல்லாது ஆக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறோம்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமும் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுக்களை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை தடுக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் புதுமாதிரியாக உள்ளது. இந்த அவசர சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது, மாநில அரசுக்கு அதிகாரிகள் சரியாக அறிவுரை வழங்கப்படவில்லை. நீதிமன்ற அதிகாரத்தில் நேரடியாக நுழையும் முயற்சியை மேற்கொள்ளும் வகையில் இந்த அவசர சட்டம் உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை ஒதுக்கித்தள்ள சட்டசபைகளுக்கு அதிகாரமில்லை என்று, ஏற்கனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்த அவசர சட்டம் செல்லாது. இதை ரத்து செய்கிறோம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்ட கோரிக்கையை நிராகரிக்கிறோம். இந்த தீர்ப்பை 4 வாரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி, அதிகாரிகள், உயர் நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.