உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் ரூ.120 கோடி செலவில் சாம்சங் (இந்தியா) நிறுவனம், பிளாட் டி.வி., எல்.சி.டி. டி.வி.க்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலையின் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி பிரிவை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து பேசுகையில், புதிதாக தொடங்கப்பட்டு உள்ள இந்த தொழிற்சாலை மிக விரைவில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்பதற்காக அரசு எல்லாவிதமான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதையே இது காட்டுகிறது.
மின்னணு தொழில்நுட்பத்தில் உள்ள வன்பொருள் (ஹாட்வேர்) தொழில் முதலீட்டை அதிக அளவில் ஈர்ப்பதற்காக உச்சகட்ட முதலீட்டு தொகை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.250 கோடி என்றும் இதர மாவட்டங்களுக்கு ரூ.150 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தொழில்களுக்கு திறமையான ஊழியர்கள் தேவை என்பதால், அந்தத் திறனை மேம்படுத்துவதற்கு தொழில் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
வேகமாக தொழில் வளர்ச்சி பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓரகடம் பகுதியில் ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அதேபோல் சாலை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தொழிற்சாலைகள் தங்களை சுற்றியுள்ள சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இந்த புதிய சாம்சங் நிறுவனம் 285 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. 2011-ல் 2,500 ஊழியர்களை வேலையில் அமர்த்தும். அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், குறிப்பாக காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
புதிய தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளித்து அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றினால், கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று புதிய தொழில் கொள்கையில் அறிவித்துள்ளோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.