காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத்தை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் 2 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயகுமார் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மாநில தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் தனக்கு முன் பிணை விடுதலை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷ்ணு பிரசாத் தாக்கல் செய்த மனு, நீதிபதி சுதந்திரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விஷ்ணு பிரசாத் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.சுப்பிரமணியம் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் காரணமாக தனது கட்சிக்காரர் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். மனுதாரர் ஒரு சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர், காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார். எனவே விஷ்ணு பிரசாத்துக்கு முன் பிணைய விடுதலை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரன், வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் முன் பிணை விடுதலை வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை 2 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அதுவரை விஷ்ணு பிரசாத்தை காவல்துறையினர் கைது செய்யக்கூடாது என்றும், அதே சமயம் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தலாம், வாக்குமூலம் பெறலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.