விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்று கைதான தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 12 பேர் தங்களுக்கு பிணைய விடுதலை கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மறைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சென்னையில் இரங்கல் ஊர்வலம் நடத்தப்போவதாக தமிழர் தேசிய இயக்கஆதரவாளர்கள் குழு அறிவித்திருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
ஆனால் தடையை மீறி அந்த குழுவின் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் சுமார் 300 பேர் நேற்று மாலை சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு தர்மன் அவர்களை அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வைகோ, பழ.நெடுமாறன் உட்பட 262 பேர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனைவியல் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக கூடுதல், தடையை மீற முயற்சி, குற்றவியல் திருத்த சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து செயல்படுதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே பழ.நெடுமாறன் உள்ளிட்ட 12 பேர் தங்களுக்கு பிணை விடுதலை வழங்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுடைய சார்பில் வழக்கறிஞர் என்.சந்திரசேகர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.