1,330 திருக்குறளையும் பிழையில்லாமல் சரியாக கூறி சாதனை படைத்துள்ள 7 வயது சிறுமி, தேசிய திறமையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த லவீனா (7) மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறு வயதிலேயே 1,330 குறள்களையும் பிழையில்லாமல் லவீனா கூறுகிறார். இதன் காரணமாக லிம்கா தேசிய சாதனைப் புத்தகத்தில் லவீனாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தேசிய திறமையாளர் விருதுக்கு லவீனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006ஆம் ஆண்டுக்கான தேசிய சிறார் திறமையாளர் சாதனை விருதுக் குழு லவீனாவை இந்த விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து லவீனாவின் தந்தை முனியசாமி கூறுகையில், 3 வயதிலிருந்தே லவீனாவுக்கு திருக்குறள் மீது பற்று வந்து விட்டது. அதனால் ஒவ்வொரு குறளையும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தாள். இன்று 1,330 குறள்களையும் பிழையில்லாமல் மிகச் சரியாக ஒப்புவிப்பாள். எந்த முறையில் குறளை கேட்டாலும் அந்தக் குறளை சரியாக கூறுவாள். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விருதும், பரிசும் வாங்கியுள்ளாள் என்றார்.
திருக்குறள் சாதனைக்காக தமிழக ஆளுநர் பர்னாலாவிடமிருந்து சமீபத்தில் ரூ.5,000 ரொக்கப் பரிசை லவீனா பெற்றுள்ளாள். அதேபோல தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும் ரூ. 5,000 ரொக்கப் பரிசை வழங்கி கெளரவித்தது. இதுதவிர முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மதுரைக்கு வந்தபோது அவர் முன்பு குறள் பாடி லவீனா பாராட்டைப் பெற்றுள்ளாள்.
டெல்லியில் வரும் 14ஆம் தேதி நடைபெறும் குழந்தைகள் தின விழாவின்போது மத்திய மகளிர், குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ரேணுகா செளத்ரி, லவீனாவுக்கு திறமையாளர் விருதினை வழங்க உள்ளார்.