சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் தொடர்பாக நீதிமன்றத்தில் சரண் அடைந்த இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ரத்தினம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 11ஆம் தேதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அப்போது ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயகுமார் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக அண்ணா சாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் மாநகராட்சி உறுப்பினர் வில்லியம்ஸ், மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் துணை தலைவராக உள்ள சூளைமேடு கில் நகரை சேர்ந்த ரத்தினம் ( 33) என்பவர் சென்னை எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி, வரும் 26-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர், அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தேவைப்பட்டால் அவரை விசாரணைக் காவலில் எடுத்து சத்திய மூர்த்தி பவன் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.