சிறிலங்க விமானப்படையால் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மன்றோ சிலை அருகில் இன்று மாலை வை.கோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான ம.தி.மு.க., தமிழர் தேசிய இயக்கத் தொண்டர்களும் குவிந்தனர். பின்னர் தமிழ்செல்வனுக்கு வீரவணக்கம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக நகரத் தொடங்கினர்.
இதில், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உள்படப் பல்வேறு தமிழ்சார்ந்த இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
சிறிது நேரத்திலேயே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர், ஊர்வலம் செல்ல முயன்ற தலைவர்களையும், தொண்டர்களையும் தடுத்துக் கைது செய்தனர்.