சத்திய மூர்த்தி பவனில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், முன் பிணைய விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் உட்கட்சி தகராறு காரணமாக சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயகுமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கில் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் செய்யாறு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 20 பேர் மீது அண்ணாசாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் வில்லியம்ஸ், மோகன் என்ற 2 காங்கிரஸ் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், தனக்கு முன் பிணைய விடுதலை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "சத்தியமூர்த்தி பவனில் நடந்த வன்முறை சம்பவத்திற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்னை வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்த்திருக்கிறார்கள். இதனால் காவல்துறையினர் என்னை கைது செய்வார்கள் என்று அஞ்சுகிறேன். எனவே, எனக்கு முன் பிணைய விடுதலை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.சுப்பிரமணியம், நீதிபதி சுதந்திரம் முன்பு ஆஜராகி, வழக்கின் அவசரம் கருதி இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து இந்த மனுவை நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி அறிவித்தார்.