அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
.
கோவையில் ரூ.377 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கோவையில் மகளிருக்கான நகர்ப்புற சுயஉதவிக் குழுக்கள் 120 செயல்படுகின்றன. இவற்றில் 1,200 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 200 பேருக்கு மானியத்துடன் கூடிய 50 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் புதிய நியமனங்களை செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த தடை கைவிடப்பட்டு ஆட்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
நகராட்சிகள் கடன் சுமையால் அவதிப்படுவதால் புதிய திட்டங்கள் தீட்ட முடியவில்லை. எனவே, வட்டி விழுக்காட்டை குறைக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்தன. இது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசினேன். முதலமைச்சரின் உத்தரவுப்படி அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.