சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 49 நீதிபதிகளில் 7 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடத்தை நிரப்ப உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்க பரிந்துரை செய்தது. அதன்படி மூன்று புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது.
புதுச்சேரி அரசு வழக்கறிஞர் சசீதரன், தொழில் தீர்ப்பாய தலைவர் வேணுகோபால், சென்னை முதன்மை செசன்சு நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் பதவி ஏற்பு விழா சென்னை உயர் நீதிமன்ற கூட்ட அரங்கில் இன்று நடந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளை வாழ்த்தி அரசு தலைமை வழக்கறிஞர் விடுதலை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால்.கனகராஜ், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் சந்திரமோகன், சென்னை பார் அசோசியேசன் தலைவர் ராமானுஜம், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் பேசினார்கள்.
விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் முகோபாத்யாயா, பி.கே.மிஸ்ரா, முருகேசன், ஆறுமுக பெருமாள் ஆதித்தன், பால்வசந்தகுமார், சுகுணா, குணசேகரன், புதுச்சேரி சட்ட அமைச்சர் வல்சராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பதவிஏற்பு விழா முடிந்ததும் 3 நீதிபதிகளும் அவர்களுடைய நீதிமன்ற இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் வழக்குகளை நடத்தினார்கள்.