மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தூண்டுதல் காரணமாகவே என்று மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் ஒரு கும்பல் நேற்று புகுந்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டது. அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் தான் காரணம் என்று மயூரா ஜெயக்குமார் குற்றம் சாற்றினார். இதையடுத்து, விஷ்ணுபிரசாத், கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ் உள்பட 19 பேர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் கூறுகையில், என் தந்தையாரும் தமிழக காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சத்யமூர்த்தி பவனில் நடந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.
இந்த நிலையில் நான்தான் கலவரத்தை தூண்டினேன் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜி.கே.வாசன் தூண்டுதலே காரணம். ஜி.கே.வாசன் தலைவராக இருந்த போதுதான் இப்படி பலர் தாக்கப்பட்டனர்.
நான் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது ஜி.கே.வாசன் மாநில தலைவராக இருந்தார். அப்போது சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அதற்காக என் அலுவலகம் உடைக்கப்பட்டது. அவர் தலைவராக இருந்த காலத்தில் தான் சத்யமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்த செல்லக்குமார் தாக்கப்பட்டார். மூத்த தலைவர் எஸ்.ஜி.விநாயக மூர்த்தி தாக்கப்பட்டார். இப்போதும் அவரது தூண்டுதல் காரணமாகவே என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று விஷ்ணு பிரசாத் கூறினார்.