சென்னையில் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சென்னையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நிதியுதவி வழங்கப்படுவதைப் போல, சென்னையில் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் நிதியுதவி வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
''அண்மையில் தமிழகத்தில் பெய்த மழையினால் சாலைகள் பாதிப்படைந்துள்ளன. பழுதான சாலைகளை நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை பராமரிக்க மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்கும்.
மின் நிலையங்களை சீரமைக்கவும், கூடுதல் மின் உற்பத்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். உலக வங்கி நிதியுதவியுடன் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு கூடுதல் நிதி உதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும்'' என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.