இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராமேஸ்வரம் மீன் வளத்துறை உதவி இயக்குனர் வேல்பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் செல்பவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று மீன்பிடிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதைத் தடுக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
இலங்கை கடற்பகுதிக்குச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய கடல் எல்லையை தாண்டி ராமேசுவரம் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க சென்றால் அவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் டீசல் நிறுத்தப்படும். மீன்பிடி உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேல்பாண்டி தெரிவித்துள்ளார்.