ஈரோடு அருகே சில கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஈரோடு அடுத்துள்ளது சென்னிமலை. இதை சுற்றியுள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம் ஆகிய கிராமங்களில் வெடி என்பது அறவே கிடையாது.
கடந்த பத்து ஆண்டுக்கு மேலாக தீபாவளியை இப்பகுதி கிராம மக்கள் இப்படித்தான் கொண்டாடுகின்றனர். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தான்.
பறவைகள் சரணாலத்தில் இந்திய நாட்டு பறவை மட்டுமின்றி, வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும். பறவைகளுக்கு பட்டாசு வெடி தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக, சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.
தீபாவளிக்கு மட்டுமின்றி இந்த பகுதியில் நடக்கும் கோயில் திருவிழாவுக்கு கூட வெடி வெடிப்பது கிடையாது. பறவைகளுக்காக வெடியை தியாகம் செய்துள்ள இந்த பகுதி மக்களின் மனிதநேயத்தை அனைவரும் பாராட்டினார்கள்.
சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, புஸ்வானம், சங்கு கரம் போன்ற பட்டாசுகளை மட்டும் கொளுத்தி மகிழ்ந்தனர்.