தி.மு.க.வில் வாரிசு அரசியல் தலை தூக்கியுள்ளது என்று விமர்சித்தவர்களுக்கு, என் பிள்ளைகள் ஆறுபேரும் தொண்டர்களுக்குத் துணை நிற்பவர்கள் என்று கூறி தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நெருக்கடி கால நெருப்பின் "ஜுவாலை'' அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அனற் பிழம்பாய் கொதித்த போது இப்போது குடும்பக் கட்சி என்று குதர்க்கம் பேசுகிற குள்ள நரிக்கும்பல் இந்தக் குடும்பம் இருக்கும் திசையின் பக்கம் கூடத் திரும்பிப் பார்த்தது கிடையாது என்று கூறியுள்ளார்.
“நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து 1976-ல் ஆட்சி கலைக்கப்பட்டது என்று அறிவிப்பு -அடுத்த நாள் காலை முதல் அதிகாரிகள் படையெடுப்பு - முன்னாள் அமைச்சர்கள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னோடிகள் என்று ஆயிரம் பேர் கைது -எந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் கூட தெரியாத நிலைமை -மாறனையும், ஸ்டாலினையும் வீட்டுக்குள் நுழைந்து போலீஸ் அதிகாரிகள் கைது செய்ததுதான் தெரியும்.
அவர்களை எந்த ஊர் சிறைக்குக் கொண்டு சென்றார்கள் -எங்கே அடைத்துள்ளார்கள் என்று தெரியாது -இருபது நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் -சென்னை சிறையில் அடைபட்டுள்ள கழகக் கண்மணிகள் அனைவரையும் சிறைக் கூண்டுகளுக்குள்ளேயே காவலர்கள் கடுமையாக அடித்து உதைத்துச் சித்ரவதை செய்தார்கள் என்பதும் காட்டுத் தீ போல் மூலை முடுக்குகள் எல்லாம் செய்தியாகப் பரவியது.
சென்னை சிறையில் இருந்தவர்களை -சிறையில் நேர் காணலுக்கே, எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நாற்பது நாட்களுக்குப் பிறகே அனுமதி கிடைத்தது -அதுவும் சிறை வாசலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போகிறோம் என்று அறிவித்த பிறகே -அந்த அனுமதியும் வழங்கப்பட்டது. இந்தக் கொடுமை ஓராண்டு நீடித்தது. அந்த ஓராண்டு காலமும் அதுவரையில் நெருங்கிப் பழகிய நண்பர்கள், கழகத்தின் சார்பில் பெரும்பதவிகளை அனுபவித்தவர்கள், "அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்; மனித உருப்பெற்று வந்தால் எப்படிக் காட்சியளிப்பர்'' என்பதை எனக்கும் இந்த இயக்கத்திற்கும் அனுபவ ரீதியாக உணர்த்தி விட்டனர் என்றே சொல்லலாம்.
அவர்களில் சிலர், நெருக்கடி காலம் நீங்கி, "ஜனநாயக'' மறுமலர்ச்சி ஏற்பட்டபோது; கழகத்தையும் என்னையும் நாடித்திரும்பியதை மறந்துவிட முடியாது. அவர்கள் யார் என்பதை அவர்களே அறிவார்கள் என்பதால் இப்போது அதை நான் நினைவூட்ட விரும்பவில்லை.
ஒரு நிகழ்ச்சி -உயிருக்குயிராக என்னுடன் பழகிய தோழர் -அவரும் அவருடன் நான்கைந்து பேரும் -நெருக்கடி காலம் முழுதும் என்னிடமிருந்து விலகி வெகுதூரம் சென்றிருந்தவர்கள் -சிரித்த முகத்துடன் என்னைச் சந்திக்க வந்தார்கள் -வாசலில் அடியெடுத்து வைத்ததுதான் தாமதம் -"அட, துரோகிகளா; இப்பத்தான் இந்த வீடு அடையாளம் தெரிந்ததா? -எல்லோரும் செத்து விட்டோம் என்று இதுவரை நினைத்து வராமல் இருந்தவர்கள்; இப்ப மட்டும் எங்கே வந்தீங்க?'' என்று உரத்த குரல் ஒன்று கேட்டு, வெளியே ஓடிப்போய் பார்த்தால் என் மகன் மு.க. அழகிரியின் குரல்தான் அது!
"என்னப்பா அழகிரி; ஏன் அவுங்களை விரட்டுரே?''
"அப்பா -எமர்ஜன்சின்னு எங்கேயோ ஓடிட்டு -இப்ப வந்திருக்காங்க -இவுங்களை நான் உள்ளே விடமாட்டேன்''
அழகிரி, இனிய இயல்புடன் கழகத்தினரிடம் அன்புடன் பழகுவதையும் கண்டிருக்கிறேன் -பாராட்டி மகிழ்ந்திருக்கிறேன் -நன்றிக்குப் பொருள் தெரியாதவர்கள், கழகத்தை வெறும் பதவி பிடிக்கும் கருவியாக மட்டும் கருதுகிறவர்கள் மீது கடுமையான வெறுப்பு உமிழ்வதையும் கண்டுணர்ந்திருக்கிறேன் -அளவோடு இருந்தால் இரண்டு சுபாவங்களுமே இளைஞர்களுக்கு இன்றியமையாத் தேவைகள்தான்.
என்னுடைய பிள்ளைகள், பெண்கள் இன்று கழக ஆர்வலர்களாக இருப்பதால்; வயிறெரிந்து வசை பாடுகிறார்களே; வார ஏடுகள், நாளேடுகளில் கூட "வாரிசு'' - "குடும்பம்'' என்றெல்லாம் விஷத்தைக் கக்கிய வண்ணம் இருக்கிறார்களே; அவர்கள் நான் நேற்று எழுதிய இளம் வயது லெனின் பற்றிய கட்டுரை தீட்டிட, நான் படித்த லெனின் வரலாற்றைப் படித்தால் அறிந்து கொள்ளக் கூடும்; "வில்தீமிர் உலியானவ் எனப்படும் லெனின் மற்றும் ஆன்னா, அலெக்ஸாந்தர், ஓல்கா, திமீத்ரிய், மரீயா எனும் ஆறு பேர் சகோதரர்கள்! அந்த நூலாசிரியர் கூறுகிறார்; மொத்தம் அந்த ஆறு பிள்ளைகளும் புரட்சிக்காரர்களாக விளங்கியது தற்செயல் அல்ல'' என்பதாக! அந்தக் குடும்பத்துப் பிள்ளைகள் எல்லோருமே இயல்பாகவே புரட்சிக் கருத்துக் கொண்டவர்களாக விளங்கியதால் பெருமையடைந்தனர் பெற்றோர் - ஆனால் இன்னமும் இங்கேதான் வாரிசு, குடும்பம் என்று வயிறு எரிந்து வக்கணை பேசிக் கொண்டிருக்கின்றனர். என் குடும்பத்துப் பிள்ளைகள் ஆறு பேரும் இயக்க ஆர்வம் படைத்தவர்கள் - லட்சியம் காப்பவர்கள் - தொண்டர்க்குத் துணை நிற்பவர்கள்.
என் குடும்பத்திலாகட்டும், இயக்க முன்னோடிகள் வீட்டுப் பிள்ளைகளாகட்டும், தந்தை வழியில் தன்மானம் போற்றித் தமிழகம் காத்திடும் ஆக்கப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது எவ்வாறு தவறாகும்? அவர்கள் போற்றுதலுக்குத் தகுதி படைத்தவர்களன்றோ?
நான் 1957-ம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்டபோது; முதலில் என்னை வரவேற்று வாழ்த்தியவர்; அந்த ஊர்ப் பெரியவர்களில் ஒருவரான வையாபுரிச் சோழகர் - அவர் பழுத்த காங்கிரஸ்காரர் -அவர் மூத்த மகன் திராவிடர் கழகம் -அவருக்கு அடுத்த மகன் தி.மு.க. -அவர்களுடைய பிள்ளைகுட்டிகள், பேரன், பேத்திகள் மொத்தம் குடும்பத்தினர் பதினைந்து பேர் இருக்கும். ஆளுக்கொரு கட்சி; அப்படியும் ஒரு குடும்பம் -எல்லாப் பிள்ளைகட்கும் தி.மு.க. பற்று என்பதாக இப்படியும் ஒரு குடும்பம்.
இதிலும் என் குடும்பத்து பிள்ளை -என் பிள்ளை என்பதால் ஸ்டாலினுக்குச் சிறப்பா? அவர் அல்லும் பகலும் ஓடியாடி அலைந்து திரிந்து இயக்கப் பணியை ஓய்வின்றி ஆற்றுவதால் தானே தொண்டர்கள் இதயத்தில் இடம் பெற்றுள்ளார் - நெருக்கடி கால நெருப்பாற்றைக் கடந்து வந்தது சாதாரணமா, இதோ; "சிட்டிபாபுவின் சிறை டைரி'' என்ற நூலில் சிங்க ஏறு சிட்டிபாபுவே தன் கைப்பட ஸ்டாலினைப் பற்றி எழுதியுள்ள வாக்கியங்கள்; இன்று வார ஏடு நடத்தும் சிலர் வயிறெரிந்து பாடுகிறார்களே, அது வசைபுராண வரிகளா? அல்லது வாழ்த்துக் கீதங்களா? அதுவும் தனது ஆருயிரைக் காராக்கிரகக் கொடுமைக்குக் காவு கொடுத்த கழகக் காளை - சிட்டிபாபுவின் இதயமல்லவா எழுத்துக்களை குருதியில் நனைத்துக் கொட்டி அடுக்கியிருக்கிறது!
இதோ -அந்தக் கண்ணீரும் செந்நீரும் -கலக்க காராக்கிரகக் கொடுமையைப் படிப்போம்!
"வெறிக்கூட்டம் முரசு பறை அறைவது போல் இரு கைகளால் அடிகொடுத்து கொண்டிருந்தன. ஒரு புறத்தில் இக்காட்சி, பள்ளிக்கூட மாணவன் பெஞ்ச் மீது நிற்பது போல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதறும் "வி.எஸ்.ஜி.'' ஒரே குத்துத் தான் நீலத்துக்கு (நீலநாராயணன்). குள்ள உருவம் நீலம்.
மேலே நிமிர்ந்து பார்த்திட மார்பகத்தில் மற்றொரு குத்து! முதுகில் இரண்டு தடி அடி! அவ்வளவுதான் குலை நோயில் கேவிக் கொண்டு கீழே விழும் நோயாளி போல் சுருண்டு விழுவதைக் கண்டேன். கால் எடுத்து வைத்து கை கொடுக்க முடியுமா என்று அசைந்தேன். தொண்டையில் ஓர் குத்து எனக்கு. மீண்டும் சுவற்றில் தள்ளப்பட்டேன். அய்யோ என்று சாய்ந்தேன் நான்.
அருகே என் அன்புத் தம்பி! ஆமாம், ஸ்டாலின் தான், தமிழகத்து முதல்- அமைச்சரின் மகன் என்று நேற்று வரை அறிந்த அந்த நபர் (சுருளிராஜன்) தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் கன்னத்தில் கை நீட்டினான், கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்று விடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. மற்றவர்கள் தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர். உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள். என்ன செய்வது? எனக்கென்று ஓர் துணிவு! திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தம்பியை தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில்!
அவைகள் அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பை தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றி விடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது. கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். அன்புத் தம்பி அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது.
வீராசாமியை தூக்கி நிறுத்தி ஒரு குத்து விட்டு உள்ளே தள்ளினர். நீலம் மூச்சுத் திணற வி.எஸ்.ஜி.யை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார். தம்பியோ தான்பட்ட அடி மறந்து தொண்டர்களை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்கவைக்க தன் தோள் துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களை தாங்கி படுக்க வைத்த காட்சி கண்டேன். என்னை ஒருவன் வாடா தம்பி வா என்று வாயில் ஓர் குத்துவிட்டு உள்ளே தள்ளினான்.''
சிறையில் நடந்த மிசாக் கொடுமையைத்தான் சிட்டிபாபு இப்படிக் கண்ணீர்க் காவியமாக்கிக் கைப்பட எழுதியுள்ளார்.
கழகக் குடும்பத்தினருக்கு அன்பு அரவணைப்பாகவும், மாறுபட்டவர்க்கு அங்குசமாகவும் விளங்கிடும் அழகிரியும் - தியாகத் தீயில் புடம்போட்ட தங்கமாக ஒளிர்ந்திடும் ஸ்டாலினும் என் ஒரு குடும்பத்தில் மட்டுமல்ல - தொண்டர்கள் பலரது குடும்பங்களிலும் அண்ணன் தம்பிகளாக இருக்கின்றார்கள் - அல்லது தணற் காட்டைத் தாமரைப் பொய்கையாக மதிக்கும் தன்மானச் சிங்கங்களாக இருக்கிறார்கள். இருப்பதால்தான் இத்தனை புயல், வெள்ளம், பூகம்பங்களுக்கு ஈடு கொடுத்து இந்த இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த நறுமணமிக்க நந்தவனத்தில் நுழைந்து பூக்களையும், செடிகொடிகளையும் நாசப்படுத்தலாமா என்று கணக்கிடுவோரை - அவர்தம் காரியம் கை கூடாமல் தடுத்து விரட்டிட இன்னும் இளைஞர்கள் பல்லோர் நமது நந்தவனத்து வேலிகளில் அமைந்துள்ள வேல்கம்புகளாக விளங்கிட விரைந்து வாரீர் என அழைக்கின்றேன். கருதிப் பார்த்து கடமையைச் செம்மையாகச் செய்திடுவீரானால் சிங்கத்துக் குகையில் சிலந்திகள் கூடு கட்டிட முடியாது; நமது புலிப்போத்துகள் முன்னே, புத்திகெட்ட நரிகள் நடத்திட முனையும் பிரித்தாளும் சூழ்ச்சி, வீழ்ச்சியில்தான் இடறி வீழ்ந்து முடியும் என்பது திண்ணம்!” என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.