''சேது சமுத்திர திட்ட பிரச்சனையிலும், ஈழத் தமிழர்கள் பிரச்சனையிலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை ம.தி.மு.க. ஆதரிக்கிறதா என்பதை வெளிப்படையாக வைகோ விளக்க வேண்டும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மரணம் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை, உலகம் முழுவதும் உள்ள தமிழன உணர்வாளர்கள், மனிதாபிமானிகள் அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
கொந்தளிக்க வேண்டிய இந்த கொள்கைப் பிரச்சனையில் வெறும் மலிவான அரசியல் உணர்வால் தூண்டப்பட்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் வழுக்கல்சறுக்கல் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஜெயலலிதா வெளியிட்டு வரும் தமிழர் விரோத அறிக்கைகள் பற்றி (குறிப்பாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், ஈழத் தமிழர் பிரச்சனைகள்) மற்றவர்களுக்குப் பதில் சொல்லுவதாகக் கருதிக் கொண்டு வைகோ வெளியிடும் கருத்துக்கள், அவரைப் பற்றிய பொதுவான மதிப்பீட்டை மிகக் கடுமையாகப் பாதிக்கச் செய்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் விடுதலைப்புலிகளுக்குத் தான் பயன் என்ற ஜெயலலிதா கருத்துக்கும் மவுனம் சாதிக்கலாமா? வைகோவை நோக்கி நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்: தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் செய்தி விடுத்தமைக்காக தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று அறிக்கை விடுகிறாரே ஜெயலலிதா, அதற்கு அடுத்தக்கட்டமாக உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி மீது வழக்கு போடுவேன் என்கிறாரே அதை வைகோ நீங்களே ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? உங்கள் நிலைப்பாடு என்ன? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.