அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது முதுகுளத்தூர் அருகே கீழ்கன்னிச்சேரி என்ற ஊரில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் வேல் கம்பு பாய்ந்ததால் படுகாயம் அடைந்த கிருஷ்ணசாமி, உடனடியாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டொரு தினங்கள் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணசாமி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தனி வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.
இப்போது அவர் பூரண குணமடைந்து விட்டார். இதைத் தொடர்ந்து நேற்று அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.