வடகிழக்குப் பருவ மழைக்கு தமிழகத்தில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை அதிக இழப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தென்மாவட்டங்களை புரட்டிப் போட்டு வருகிறது. இதில் திருநெல்வேலி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்தில் இடித்தாக்கியதில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரும், விவசாயி ஒருவரும் பலியானார்கள்.
அம்பாசமுத்திரம் அருகே பள்ளிக்கூடம் மீது இடி தாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் தப்பினர். இதில் அந்த அரசு பள்ளியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவை அடுத்த ஒரு சில தினங்களில் முழுக்கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.