தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த மதிய உணவு அருந்தாமல் தொடர்ந்து பணி செய்யும் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
சென்னை எழும்பூர் 5-வது பெருநகர நீதிபதியை வழக்கறிஞர்கள் தாக்கியதை கண்டித்து நேற்று மதிய உணவு அருந்தாமல் பணி செய்யும் போராட்டம் நடத்த தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்படுவதாக நீதிபதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் செயலாளரும், அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதியுமான இரா.பரஞ்சோதி கூறுகையில், சென்னையில் நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று மதிய உணவு அருந்தாமல் தொடர்ந்து பணி செய்யும் போராட்டம் நடத்த திட்டமிருந்தோம். நேற்று முன்தினமும் அதற்கு முதல் நாளும் நீதிபதிகள் சங்க தலைவர் ராமலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
எனவே தலைமை நீதிபதி மீதும் உயர் நீதிமன்றம் மீதும் உள்ள மரியாதை காரணமாகவும் உறுப்பினர்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க உறுதி கூறியுள்ளதாலும் இந்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளுவதாக நீதிபதிகள் சங்க தலைவர் ராமலிங்கம் அறிவித்துள்ளார் என்று தமிழ்நாடு நீதிபதிகள் சங்க செயலாளர் இரா.பரஞ்சோதி கூறினார்.