மலேசியாவில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சட்டத்திற்குப் புறம்பாக இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சில இந்து கோவில்கள் மலேசியாவில் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே உள்ள மலேசிய தூதரகம் முன்பு இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் துரைசங்கரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மலேசிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மலேசியா தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை மாநில பா.ஜனதா தலைவர் இல.கணேசன், பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சென்று பார்த்தனர். பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அயல்நாடுகள் விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், மலேசியா நாடுகளில் இந்துக்கள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. ஆனால் பெங்களூரை சேர்ந்த டாக்டர் ஹனீப் விவகாரத்தில் எடுத்தக்கொண்ட அக்கறையில் ஒருபகுதி அளவு கூட இந்துக்கள் விஷயத்தில் எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது என்றார்.