நீதிபதிகளை தாக்கிய வழக்கறிஞர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நீதிபதிகள் மதிய உணவு சாப்பிடாமல் வழக்கு விசாரித்து நூதன போராட்டம் நடத்தினர்.
சென்னை எழும்பூர் 5-வது பெருநகர குற்றவியல் நீதிபதியாக இருப்பவர் முருகானந்தம். இவரை கடந்த 31ஆம் தேதி வழக்கு விசாரணையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சில வழக்கறிஞர்கள் தாக்கினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தங்கத்துரை, ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிபதி தாக்கப்பட்ட சம்பவம் நீதிபதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் மதிய உணவு இடைவேளை இல்லாமல் சாத்வீக முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நூதனமான முறையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 750 முன்சீப் மாஜிஸ்திரேட், சப் ஜட்ஜ், மாவட்ட நீதிபதிகள் மதியம் உணவு இடைவேளை இல்லாமல் வழக்குகளை தொடர்ந்து விசாரித்தனர். நீதிபதிகள் இடைவேளை இல்லாமல் பணியில் ஈடுபட்டதால் மற்ற நீதிமன்ற ஊழியர்களும் இடைவேளை இல்லாமல் பணிகளில் ஈடுபட்டார்கள்.