சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பிறப்பித்துள்ளார். புதிய நீதிபதிகளின் பதவிஏற்பு விழா 12ஆம் தேதி நடக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மொத்தம் 49 நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்போது 42 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். எனவே, புதிய நீதிபதிகளை நியமிக்க 6 பேர் கொண்ட பட்டியலை தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இவர்களில், வழக்கறிஞர் கே.கே.சசீதரன், சென்னையிலுள்ள தொழில் தீர்ப்பாய நீதிபதி எம்.வேணுகோபால், சென்னை முதன்மை செசன்சு நீதிபதி வி.பெரிய கருப்பையா ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பிறப்பித்துள்ளார்.
இந்த புதிய நீதிபதிகளின் பதவி ஏற்பு விழா வரும் 12ஆம் தேதி காலை 10.15 மணிக்கு நடக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.