விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனைக் கொலை செய்ததன் மூலம் சிறிலங்கா அரசு அமைதியை விரும்பவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன் பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் கொல்லப்படும்போது எல்லாம் இந்திய அரசு மெளனம் சாதிக்கிறது. இது கண்டனத்துக்குரியது என்றார்.
சுப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் மூலம், அமைதிப் பேச்சுக்கான வாய்ப்புகள் மங்கி விட்டன. சமரச தீர்வுக்கு சிறிலங்கா அரசு தயாராக இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
சிறிலங்கா கடற்படை இதுவரை 800 இந்திய மீனவர்களைக் கொன்று குவித்துள்ளது. ஆசியாவிலேயே 2வது பெரிய கடற்படை என்று கூறப்படும் இந்திய கடற்படையால், ஒரு தமிழக மீனவரின் உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை.
சிறிலங்கா கடற்படையினரின் பிடியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்புக்காக ஆயுதங்கள தர வேண்டும். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க வேண்டும்.
தமிழகம் தனது உரிமைகளை பல விதங்களிலும் இழந்து வருகிறது. சேலம் கோட்டத்தைக் கூட சில தமிழக பகுதிகளை இழந்துதான் பெற முடிந்திருக்கிறது என்றார் நெடுமாறன்.