''புலிகளை மன்னிக்க மாட்டோம் என்று இன்றும் சொல்லுகிற காங்கிரசுடனான உறவை, தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்ல வீரமணி தயாரா?'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு நிலை மேற்கொண்டு உள்ள அ.தி.மு.க.வோடு ம.தி.மு.க. கூட்டணி தொடர்வது சரியல்ல என்றும், விலக வேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க.வை அழிக்க நினைக்கின்ற சக்திகளும், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை வேறுபடுத்த திட்டமிட்டு விமர்சனங்களைச் செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் முகமாகத்தான் சில கேள்விகளை எழுப்புகிறேன்.
தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் கடந்த ஆண்டு நான் ஆதரித்து பேசியதற்குக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, என்னை கைது செய்ய வேண்டும் என்றும், ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்பினார்களே, அப்போதெல்லாம் இந்த ஆலோசனையாளர்கள் வாய் மூடிக்கிடந்தது ஏன்?
சிங்கள அரசு நடத்தும் இன படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்டு ரேடார்களையும், ஆயுதங்களையும் வழங்கி மன்மோகன் சிங் அரசு ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்து வருகிறதே? பசியால், நோயால் மடிகின்ற ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் திரட்டப்பட்ட உணவையும், மருந்தையும் அனுப்பிட, செஞ்சிலுவைச் சங்கத்துக்கே அனுமதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சகம் புரிகிறதே?
தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் அந்த அரசில் இருந்து, தி.மு.க. வெளியேற வேண்டும் என்று வீரமணி உள்ளிட்டோர் கூறும் துணிச்சல் உண்டா? புலிகளை மன்னிக்க மாட்டோம் என்று இன்றும் சொல்லுகிற காங்கிரசுடனான உறவை, தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்ல வீரமணி தயாரா? என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.