சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையை குமாரபாளையம் மருத்துவமனையுடன் இணைப்பதை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகரப்பகுதியில் 1992-93ஆம் ஆண்டு அவசரப்பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகியவைகளைக் கொண்ட அரசு பொது மருத்துவமனை தொடங்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருவதாகவும், இந்த மருத்துவமனையில் தினந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருவதாகவும் தெரியவருகிறது.
ஆனால் தற்போது தி.மு.க. அரசு பொது மருத்துவமனையை 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள குமாரபாளையம் அரசு மருத்துவமனையுடன் இணைப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்று வரும் இந்த மருத்துவமனையை குமாரபாளையம் அரசு மருத்துவமனையுடன் இணைக்க வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்து, தொடர்ந்து அதே இடத்தில் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி ஈரோடு வடக்கு மாவட்டக் அ.தி.மு.க. சார்பில் நாளை (6ஆம் தேதி) காலை 10 மணி அளவில் சத்திய மங்கலம் நகர அரசு பொது மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.