மதிப்பு கூட்டு வரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து, அரிசி கடத்தல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு பேரவைத் தலைவர், தற்போது இது குறித்து விசாரணை நடந்து வருவதால் இப்பிரச்சனை பற்றி சபையில் பேச அனுமதிக்க முடியாது என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், ஓம் சக்தி சேகர், ஓமலிங்கம், ம.தி.மு.க. உறுப்பினர் பி.ஆர்.சிவா ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்கள் சபைக்கு வந்தனர்.
இதற்கிடையே, முதல்வர் ரங்கசாமி, 2007ஆம் ஆண்டிற்கான மதிப்புக் கூடுதல் (வாட்) வரி சட்ட வரைவை அறிமுகப்படுத்தினார். இதன் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கடந்த முறை இடம் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்து சபையில் இருந்து வெளியேறிச் சென்ற சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி இன்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கல்வி அமைச்சர் வெளியூர் சென்றிருப்பதால் அவருடைய இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
பின்னர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தின் 7வது ஆண்டறிக்கையை வாசிக்க அமைச்சர் கந்தசாமி முற்பட்டபோது மைக் வேலை செய்யவில்லை. அதனால் முதல்வர் ரங்கசாமி அந்த அறிக்கையை வாசித்தார்.
அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் எழுந்து, உள்கட்சிப் பூசலை சபையில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், அமைச்சர் வந்திருந்தும் அவரை பேசவிடாமல் செய்திருப்பது சரியல்ல என்றும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், மதிப்புக் கூடுதல் வரி சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து காலை 11.30 மணி அளவில் சட்டப் பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.