வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
கோவையை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் பாலகிருஷ்ணன் (வயது 35). அவரது மனைவி மகேஸ்வரி (30), மகள் யோகனாம்பாள் (7), மகன் மணிகண்டன் (6), உறவினர் ராஜேஷ் ஆகியோருடன் கரூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை கோவைக்கு வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் ராஜா (35) ஓட்டிச் சென்றார்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு கார் வெள்ளகோவில் அருகே உள்ள குருக்கத்தி சோதனை சாவடிக்கு எதிரே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த மணல் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் டிரைவர் ராஜா, சிறுவன் மணிகண்டன், ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். பாலகிருஷ்ணன், மகேஸ்வரி, யோகனாம்பாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.