நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துணைவியார் கமலா அம்மாளின் உடலுக்கு முதலமைச்சர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். கமலா அம்மாளின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை காலை நடைபெறுகிறது.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் (வயது68) உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார். அவர் மறைந்த தகவல் அறிந்ததும் முதலமைச்சர் கருணாநிதி, தி.நகரில் உள்ள சிவாஜியின் வீட்டுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக மருத்துவ மனையிலேயே நடிகர் கமல்ஹாசன், முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் ஸ்டாலின், மீனாட்சி அம்மன் கோயில் முன்னாள் தர்க்கார் வி.என்.சிதம்பரம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், விஜயகுமார், சத்யராஜ், நெப்போலியன், ராமராஜன், இயக்குனர்கள் பாரதிராஜா, பிரதாப் போத்தன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகைகள் மனோரமா, சரோஜா தேவி, லட்சுமி, குஷ்பு, ராதிகா, சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன், , ஏராளமான சிவாஜி ரசிகர்கள் உட்பட அரசியல், திரையுலகைச் சேர்ந்த பலர் சிவாஜியின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.