எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா எந்த காலத்திலும் குண்டுதுளைக்காத கார் பாதுகாப்புக்காக வேண்டுமென்று சொல்லவில்லை என்றும், அவர் ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யைச் சொல்லி வருகிறார் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
''எந்த காலத்திலும் குண்டு துளைக்காத கார் அரசு சார்பில் தனக்கு ஒதுக்கப்பட்டதில்லை என்றும், அதை வேண்டாம் என்று கூறியதில்லை என்றும், தற்போது அந்த கார் தனது பாதுகாப்புக்காக வேண்டுமென்றும்'' ஜெயலலிதா கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, இதுவும் ஒரு பொய்தான். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதே 4.11.2003 அன்று கூடுதல் டிஜிபி கே. நடராஜன், பொதுத்துறை துணைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், அரசால் ஒதுக்கப்படும் குண்டு துளைக்காத கார்கள் முதலமைச்சருக்கு வசதியாக இல்லாத காரணத்தால், அவருக்கு சொந்தமான பஜ்ரோ காரை உபயோகப்படுத்தி கொள்கிறார். அவருக்கு வசதியான குண்டுதுளைக்காத கார்களை வாங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்திற்கு பிறகு மூன்றாண்டு ஆட்சி பொறுப்பிலே இருந்தவர் ஜெயலலிதாதான். ஒரு பொய்யை மறைக்க 9 பொய் என்பார்கள். ஆனால் இவர்கள் ஓராயிரம் பொய்யை அல்லவா சொல்கிறார்கள்.
தேவர் நூற்றாண்டு விழாவே இந்த ஆண்டுதான் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த விழாவிற்கு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்திலேயே ரூ. 3 கோடி நிதி ஒதுக்கியதாக கூறினார். நிதி ஒதுக்கவே இல்லை என்று நான் மறுத்து 3 நாட்களாகிறது. அன்றாடம் மூன்று அறிக்கைவிடும் ஜெயலலிதா, இதுவரை பதிலளிக்கவில்லை. இதுபோலவேதான் குண்டு துளைக்காத காரும் என்று கூறியுள்ளார்.