தமிழ்செல்வனின் இழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இலங்கையில் சிறிலங்க விமானப்படை நடத்திய தாக்குதலில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்செல்வனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் தலைமையேற்றார். தமிழ்செல்வனின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்வில் கவிஞர் அறிவுமதி, ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி, தமிழ்த் தேசியப் பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகி பாலு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தமிழ்செல்வன் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக தமிழர்களுக்கும் இழப்பாகும். ஈழப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வே இறுதியானது என்று சொன்னவர் தமிழ்செல்வன்.
அவரது இழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தக்கோரி முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைப்போம்.
மனிதநேயமற்ற சிங்கள இனவெறியர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.