தேர்தலை சந்திக்க அஞ்சுவதால்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சமரசம் செய்துகொள்ள முயற்சி செய்கின்றன என்று பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக வாபஸ் பெற்று பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். ஏற்கனவே, எஸ்.ஆர்.பொம்மை வழக்கிலும், பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் ஆட்சி அமைப்பு தொடர்பான வழக்கிலும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் படி, ஆட்சி அமைக்க எடியூரப்பாவை அம்மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் உடனடியாக அழைக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். கர்நாடக ஆளுநர் ஏற்கனவே எடியூரப்பாவிடம் அவருக்கு பெரும்பான்மை இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளார். எனினும், அவர் ஆளுநனரை போல் செயல்படாமல் காங்கிரஸ் கட்சித் தலைவர் போல் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் பின் கதவு வழியாக ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டதால் சட்டசபையை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது.
குஜராத்தில் மோடி மீது டெஹல்கா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பா.ஜ.க.வுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது. குஜராத் கலவரங்கள் பற்றி பேசும் காங்கிரஸ் கட்சி கோத்ரா சம்பவம் பற்றி பேசாதது ஏன்? ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள லாலு பிரசாத் யாதவ், மோடியை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது வேடிக்கையானது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது பதவி காலம் முழுவதும் நீடிக்காது. தேர்தலை சந்திக்க பயந்து கொண்டே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சமரசத்திற்கு வர முயற்சி செய்கின்றன என்று வெங்கையா நாயுடு கூறினார்.