சிவாஜி கதைக்கு உரிமை கோரி வழக்கில் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் நடிகர் ரஜினிகாந்தும், இயக்குனர் ஷங்கரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சிவாஜி படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று உரிமை கோரி, சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இசாக் முகமது அலி, `சிவாஜி' படத்தில் கதாநாயகனாக நடித்த ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், பட தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம். ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார். பதில் அளிப்பதற்கான கால அவகாசம் இரண்டு முறை நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஷத்திகுமார் வழக்கை விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் ரஜினி, இயக்குனர் ஷங்கர், ஏ.வி.எம். நிறுவனம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஏற்கனவே 2 முறை விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனி கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.