உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு கடைகளில் நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை காவல் துறையினர் கண்காணிப்பார்கள் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், எழும்பூர் நீதிமன்ற நடுவரும், நீதிமன்ற உதவியாளரும், ஊழியரும் தாக்கப்பட்டது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பற்றி விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாஞ்சில் குமரன் கூறினார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக் கடைகளை அமைப்பதற்கும், பட்டாசுகளை விற்பதற்கும் கடந்த 27ஆம் தேதி உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி தீப்பிடிக்கும் கொட்டகைகளில் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தது 3 மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளன.
இவை முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே காவல் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து விவாதித்து அறிவுரை வழங்க இணை ஆணையர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.