சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து 2 வழக்கறிஞர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நடுவர்மன்ற நடுவராக (மாஜிஸ்திரேட்) இருப்பவர் முருகானந்தம். திருட்டு வழக்கு ஒன்றில் தனது கட்சிக்காரர்களுக்கு ஜாமீன் கேட்டு வழக்கறிஞர்கள் ராஜதுரை, இளங்கோ ஆகியோர் வாதாடினார்கள். பின்னர் நடுவர் முருகானந்தம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர்கள் ராஜதுரை, இளங்கோ ஆகியோர் நடுவர் முருகானந்தத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
தன் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் ராஜதுரை, இளங்கோ ஆகியோர் மீது நீதிமன்ற நடுவர் முருகானந்தம் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மாலாவிடம் புகார் செய்தார். இதே போல நீதிமன்ற நடுவர் முருகானந்தத்துக்கு எதிராக தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் இருவரும் புகார் செய்தனர்.
இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராம சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, பத்திரிகைகளில் வெளியான செய்தி அடிப்படையில் தானாக முன்வந்து வழக்கறிஞர்கள் ராஜதுரை, இளங்கோ மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் இருவரும் வரும் 29ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாக்கீது அனுப்பவும் உத்தரவிட்டது.