தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று திராவிடர் விழிப்புணர்ச்சி கழகத் தலைவர் பி.டி.குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.குமார், கடந்த 29ஆம் தேதி முதுகுளத்தூரில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி தொடர்பான முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும், நானும் சென்று கொண்டிருந்தோம். அவர் சென்ற கார் முதலில் சென்றது. அவரைத் தொடர்ந்து நான் வேறொரு காரில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது முதுகுளத்தூர் அருகே கீழகன்னிச்சேரி என்ற ஊரில் சுமார் 50க்கும் மேற்பட்ட மர்ம கும்பல், ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கார்களை தாக்கியது. அப்போது என்னை கொலை செய்யும் முயற்சியோடு வந்த அந்த கும்பல் அடையாளம் தெரியாமல் கிருஷ்ணசாமியை ஈட்டியால் தாக்கியுள்ளனர். நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.
தேவர் ஜெயந்தி விழாவை சீர்குலைக்கவே ஒரு சமூக விரோத கும்பல் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கிறது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். சம்பவத்தன்று அந்த பாதை வழியாக செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் எங்களிடம் கூறவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது காவல்துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அவருக்கு எந்தவித பாதுகாப்பும் காவல்துறையினர் கொடுக்கவில்லை என்று டி.பி.குமார் கூறினார்.