பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை பாலக்காடு கோட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பொள்ளாச்சியில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
பாலக்காடு ரெயில்வே கோட்டத்தை இரண்டாக பிரித்து சேலம் ரெயில்வே கோட்டம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து கோவை, திருப்பூரை சேலம் கோட்டத்துடன் இணைப்பதால் பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட, மதுரை ரெயில்வே கோட்டத்திலிருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு ரெயில்வே கோட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் சேலம் ரெயில்வே கோட்டம் தொடக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு கருணாநிதி, ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத், இணையமைச்சர் வேலு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு ரெயில்வே கோட்டத்துடன் சேர்த்ததை கண்டித்து சேலம் ரெயில்வே கோட்ட தொடக்க விழாவின் போது பொள்ளாச்சியில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று வைகோ அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை பொள்ளாச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்துடன் இணைப்பது தமிழகத்தின் உடலுறுப்புகளை வெட்டி கேரளாவிடம் ஒப்படைப்பதற்கு சமமாகும் என்று ம.தி.மு.க. குற்றம்சாற்றியுள்ளது.