மகனை அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்த மணப்பாறை டாக்டர் தம்பதியினர் ஒரு ஆண்டுகாலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்து உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த மருத்துவர் தம்பதிகள் முருகேசன் - காந்திமதி. இவர்கள் மணப்பாறையில் தனியாக மருத்துவமனை நடத்துகிறார்கள். இவர்களது 15 வயது மகன் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்து பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்திய மணப்பாறை காவல்துறையினர் மருத்துவ தம்பதி முருகேசனையும், அவரது மனைவி காந்திமதியையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவர்கள் அடங்கிய தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மருத்துவர் முருகேசனும், அவரது மனைவி காந்திமதியும் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்கள். இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் முருகேசனும், காந்திமதியும் ஒரு வருட காலம் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிப்பது, ஒரு வருட காலம் கழித்து மீண்டும் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் மறு பரிசீலனை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தலைவர் மருத்துவர் பிரகாசத் கூறுகையில், மருத்துவர் முருகேசன், காந்திமதி மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ கொடுத்த விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் மருத்துவ ர் முருகேசன், காந்திமதி மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.