தமிழர் வாழ்வில் ஜோதிடம் என்ற தலைப்பில் பிரபல ஜோதிடர் க.ப. வித்யாதரன் செய்த ஆய்வை ஏற்று அவருக்கு முனைவர் பட்டத்தை சென்னை பல்கலைக் கழகம் உறுதி செய்துள்ளது!
வித்யாதரன் நடத்திய ஜோதிட ஆய்வு குறித்து இன்று வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் நடந்த மொழித் தேர்விற்கு பேராசிரியா ஆதி நாராயணன் தேர்வாளராக அமர்ந்தார்.
தனது ஆய்வு குறித்து விளக்கிய வித்யாதரன், ஜோதிடத்தின் பல்வேறு வகைகளை விளக்கி அவைகளின் தன்மைகளையும், பழமையையும் விளக்கிக் கூறினார். சமூக வாழ்வில் ஜோதிடத்தின் பயன்பாடு என்ற அடிப்படையிலேயே தான் இந்த ஆய்வை செய்ததாக விளக்கிய வித்யாதரன், ஆய்வாளர்கள் உட்பட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
மழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம், கடல்கோள் ஆகியவை எந்த அளவிற்கு இருக்கும். எங்கு தாக்கும் என்பதனை நன்கு முன்னரே கணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசிற்கு உதவிட முடியும் என்று கூறினார்.
ஜோதிட ரீதியாக செய்யப்படும் இந்தக் கணிப்புகள் எந்த அளவிற்கு நம்பத்தக்கதாக இருக்கும் என்று கேட்டதற்கு, 90 விழுக்காடு வரை துல்லியமாக கணித்துக் கூறிட முடியும் என்று பதிலளித்த வித்யாதரன், ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவிற்கு இயற்கையின் தாக்கங்கள் இருக்கும் என்பதனையும் கணிக்கலாம் என்று கூறினார்.
வித்யாதரனின் இந்த ஆய்விற்கு பேராசிரியர் முனைவர் மகாலட்சுமி மேற்பார்வையாளராக இருந்து வழிகாட்டியுள்ளார்.