திண்டிவனத்தில் சாட்சி சொல்ல வந்த தே.மு.தி.க. பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது!
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி திண்டிவனம் பாலத்துக்கு கீழே வைக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பேனர் கிழிக்கப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜா உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது ஜாமீனில் இருக்கும் ராஜா இன்று சாட்சி சொல்வதற்காக நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்ற வாசலில் அவரை வழிமறித்த கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.