முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.
முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்காக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் நடிகர் கார்த்திக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரும் வந்திருந்தனர்.
இந்நிலையில் மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கிருந்த கார்த்திக்கை நடிகர் சரத்குமார் திடீரென்று சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். தங்களது கட்சி செயல்பாடுகள் குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பற்றி கேட்டபோது அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே நேற்று இரவு மதுரை நேதாஜி சாலையில் ஜான்சிராணி பூங்கா அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடந்த பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நூற்றாண்டு ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தை மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் புறக்கணித்து விட்டார். தொடர்ந்து நடிகர் கார்த்திக் பொதுக்கூட்டங்களை புறக்கணித்து வருவதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.