கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு தரப்பில் நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்க முடியாததால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்ராபதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா உட்பட 43 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி உத்ராபதி தனது தீர்ப்பில் குற்றச்சதி, கொலை, இரு பிரிவினருக்கும் இடையே மோதலை உருவாக்கும் செயல்களில் குற்றவாளிகள் ஈடுபட்டது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
மோசமான விளைவுகளை ஏற்படுத்திய கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படாததற்கான காரணங்களை தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக நிகழ்ந்த மத மோதல்களை அரசு சரியாக கையாளவில்லை என்றும், இந்த வழக்கில் நேரடி ஆதாரங்கள் எதுவும் அரசு தரப்பில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 10 ஆண்டுகள் சிறையிலேயே கழித்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால் தங்கள் வழக்குகளை அவர்கள் தங்களுக்கு ஆதரவாக வாதாடி இருக்க முடியும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே அவர்களுக்கு மரண தண்டனையை தான் விதிக்கவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் மரண தண்டனை விதிப்பது பற்றி அந்தந்த நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம் என குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் கூறுவதாக நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.