புதுச்சேரி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 5ஆம் தேதி மீண்டும் கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் சிவபிரகாசம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 24ஆம் தேதி கூடியது. கூட்டம் ஆரம்பித்ததும் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், மறைந்த புதுவை முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க., பா.ம.க., பு.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். கோஷங்களை எழுப்பி அவையை விட்டு வெளியேறினர். பின்னர், சபாநாயகர் ராதாகிருஷ்ணன் காலவரையின்றி அவையை ஒத்தி வைப்பதாகக் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை புதுச்சேரி சட்டசபை செயலாளர் சிவபிரகாசம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி புதுச்சேரி சட்டசபை மீண்டும் கூட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 5ஆம் தேதி மதிப்பு கூட்டுவரி அமல்படுத்துவது சம்பந்தமான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் 5,6 ஆகிய இருதினங்கள் சட்டசபை நடைபெறும் என்று தெரிகிறது.
கடந்த முறை சட்டசபை கூடியபோது இருக்கை ஒதுக்கீடு சம்பந்தமாக அவையை விட்டு வெளிநடப்பு செய்த சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி இம்முறை மீண்டும் அவைக்கு வருவாரா? என்பது பற்றி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு நிலவுகிறது.
சீனியாரிட்டி அடிப்படையில் அமைச்சர் வைதியலிங்கத்திற்கு அடுத்த இருக்கை அவருக்கு ஒதுக்கப்படுமா? என்பது பற்றிய பேச்சு சட்டசபை வட்டாரத்தில் எதிரொலித்து வருகிறது.
அதேபோன்று கடந்த முறை அமளில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள் என்றும் தெரிகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 5ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.