ஈரோடு அருகே அரிசி ஆலை புகைகூண்டு இடிந்து 6 பேர் சாவு
-எமது ஈரோடு செய்தியாளர்
ஈரோடு அருகே அரிசி ஆலையில் உள்ள புகைகூண்டு இடிந்து விழுந்து 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோடு அருகே உள்ளது சிவகிரியில் ஆறுமுகம் என்பவர் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இங்கு சுமார் 20 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த அரிசி ஆலை கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதாகும். இந்த ஆலையை தற்போது நவீன அரிசி ஆலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக சுமார் 75 அடி உயரமுள்ள புகைகூண்டு கட்டப்பட்டது. இதில் அடிப்பகுதி மட்டும் காங்கிரட் மூலம் அமைத்து மேற்பகுதி செங்கற்கள் மற்றும் செம்மண்ணை கொண்டு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் கட்டுமான பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மழையினால் இந்த புகைகூண்டு நன்றாக நனைந்து ஈரமாக இருந்துள்ளது.
நேற்று மழையில்லாத காரணத்தால் கட்டுமானப்பணி தொடங்கியது. மாலை திடீரென 75 அடி உயரமுள்ள புகைகூண்டு சரிந்து விழுந்தது. இதில் அதன்கீழ÷ பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளிகள் சிக்கினார்கள்.உடனடியாக தீயனைப்பு வீரர்களை வரவழைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை களைத்தபோது அதற்குள் தொழிலாளிகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இந்த விபத்தில் சண்முகசுந்தரம்(36), சுந்தரம்(43), ரத்தினசபாபதி(50), நடராஜ்(70), பிச்சைமுத்து (40), மணி (35) ஆகியோர் இறந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் ஈரோடு மாவட்ட ஆட்சிதலைவர் உதயசந்திரன், கைத்தறிதுறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.