ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்தால் குற்றவாளிகளாக கருதுவதா என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி விடுத்துள்ளார்.
இலங்கையில் 1948-ஆம் ஆண்டு இலங்கையை ஆங்கிலேயன் விட்டு சென்ற போது சிங்களர் கையில் ஆட்சியை கொடுத்து விட்டு சென்றார்கள். அன்று முதலே அங்கு தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. 22 விடுதலைப்புலிகளுடன் வன்னிக்காட்டுக்கு சென்ற பிரபாகரனின் வளர்ச்சி உலகமே வியக்கிறது என்று வைகோ கூறினார்.
இலங்கை பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான். அது விரைவில் மலரும். ஈழத்தமிழர்களுக்கு எந்த வகையில் உதவி செய்தாலும் அதை குற்றம் என்று சொல்வதா, மனிதாபிமான முறையில் உதவிசெய்தால் குற்றவாளிகளாக கருதுவதா? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை ராணுவத்தினர் ஈவு இறக்கமின்றி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த காட்டு மிராண்டித்தனமாக செயலை இந்தியா கண்டிக்க வேண்டும். அங்கு பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.