நைஜீரியாவில் கடத்தப்பட்ட நெல்லையைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் உள்பட 4 இந்தியர்களும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்தவர்கள் வினோத், மோகன்ராஜ், அஜீஸ் காமராஜ். இவர்கள் மூவரும் நைஜீரியாவில் உள்ள இத்தாலிக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் வட இந்தியாவைச் சேர்ந்த சிலரும் பணிபுரிந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பணியாற்றிவந்த தொழிலாளர்களின் கப்பலை தீவிரவாதிகள் சிலர் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அதிலிருந்த தமிழர்கள் வினோத், மோகன்ராஜ், அஜீஸ் காமராஜ், மாராட்டியர் ஒருவர் உட்பட 6 பேரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கு இந்திய மதிப்பில் சுமார் 250 கோடி ரூபாய் வேண்டும் என்று தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் எண்ணெய் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவந்தது.
மேலும், இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் மத்திய அயலுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கைகள் விடுத்தனர்.
இதன்பேரில், நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், கடத்தப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட எண்ணெய் நிறுவனம், அவர்கள் இன்று காலை 9 மணியளவில் விடுவிக்கப்பட்டு விட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நெல்லையில் உள்ள உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களை தமிழகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகவல்களைத் தமிழகத் தொலைக்காட்சிகள் உறுதிசெய்துள்ளன.