தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம். கிருஷ்ணசாமி, வேல்கம்பால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழ்கன்னிசேரியில் நேற்று ( திங்கட் கிழமை ) இரவு சுமார் 8.15 மணியளவில் நடைபெற்றது.
படுகாயமடைந்த கிருஷ்ணசாமிக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக ம்துரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிருஷ்ணசாமிக்கு சிகிச்சையளித்து வரும் அப்போலோ மருத்துவ மனையின் மருத்துவ சேவை பிரிவு இயக்குநர் ரோகினி ஸ்ரீதர் கூறுகையில், கிருண்சாமி சுயநினைவுடன், நல்ல நிலையில் இருப்பதாகவும், வயிற்று பகுதியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்த பின்பே முக்கியமான உடல் உறுப்புகளில் பாதிப்பு இருக்கின்றதா என்பது தெரியவரும் என்று தெரிவித்தார்.
முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறவிருந்த மும்பெரும் விழாவில் பங்கேற்பதற்காகவும், இன்று காலையில் ( செவ்வாய் கிழமை ) பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரசாருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
பரமக்குடியில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட அவர், கீழ்க்கன்னிசேரி அருகே சென்று கொண்டிருந்தார். அவரது காரைத் தொடர்ந்து திராவிட விழிப்புணர்ச்சி கழக நிறுவனத் தலைவர் பி.டி.குமாரும் அவரது ஆதரவாளர்களும் காரில் வந்தனர்.
அவர்களது கார் கீழ்க்கன்னிசேரி அருகே சென்று கொண்டிருந்த போது அடை.யாளம் தெரியாத கும்பல் கார்களை வழிமறித்துத் தாக்கியது. அத்துடன் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கார்களின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில நிலைகுலைந்த கார் ஓட்டுனர்கள் காரை நிறுத்தினார்கள். இதனால் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நின்றன.
காரை தொடர்நது வந்த வன்முறைக் கும்பல் காரின் கதவை திறந்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மீது வேல் கம்பால் குத்தியது. இதில் அவரின் நடு மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் வேல் கம்பு பாய்ந்ததால் ரத்தம் பீறிட்டது.
வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்குள்ளானது காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி என்று தெரிவித்தனர். இதையடுத்து அக் கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியுடன் பயணம் செய்த அப்பாநாடு மறவர் சங்கத் தலைவர் பூவலிங்கமும் தாக்கப்பட்டார்.
இவர்களுடன் பயணம் செய்த காங்கிகஸ் கட்சி சிறுபான்மை பிரிவின் முன்னாள் தலைவர் அயூப் கான் கூறுகையில், சம்பவம் நடந்த பகுதியில், காவல் துறையை சேர்ந்த யாரும் இல்லை. கத்தி மற்றும் வேல் கம்புகளுடன் இருந்த பெருவாரியான இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.