தமிழகத்தில் இதுவரை மழைக்கு 4 சிறுமிகள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலை அடுத்துள்ள நந்திவனத்தை சேர்ந்த ராஜகுரு என்பவரின் மகள்கள் தீபா (வயது 12), எழிலரசி (5), திவ்யா (4) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுச் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்து பலியாயினர். குழந்தைகளின் தாய் சாந்தாயி என்பவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதே போல கும்பகோணம் அருகே குமரன்குடியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் வீட்டுச்சுவர் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததில் அவரது 3வயது மகன் கவுதம் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தான். பாம்பன் சின்னப்பாலம் பகுதியை சேர்ந்த மீனவர் பிச்சை தனது மனைவி செல்வராணியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அங்க படகு கவிழ்ந்து விழுந்து ராட்சத அலையில் சிக்சி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் காளிராஜ் (20) அங்குள்ள பஜனை மண்டபத்தில் படுத்து தூங்கியபோது மேற்கூரை இடிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். நெய்வேலி அருகே உள்ள சேப்ளாநத்தம் கிராமத்தில் மழைநீரை குடித்ததில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு கலியன் (60) என்ற விவசாயி பரிதாபமாக செத்தார்.
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சங்கரபாணி (62) என்பவரும், பல்லாவரத்தை சேர்ந்த சஜு )20) என்பவரும், சிட்லப்பாக்கத்தை சேர்ந்த தேன்மொழி (42) என்பவரும் மின்சாரம் தாக்கி பலியாயினர்.
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் சிக்கி பழனியம்மாள் என்பவரும், நீலகிரி மாவட்டத்தில் வீடு இடிந்து கமலா என்ற பெண்ணும் பலியாகியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் குழந்தை தெரசா என்ற பெண் வீடு இடிந்தும், லால்குடி அருகே ம.தி.மு.க கவுன்சிலர் விசுவநாதன் மின்சாரம் தாக்கியும், அடையாளம் தெரியாத ஒருவர் திருச்சி மேலபுதூரில் சாக்கடையில் சிக்கியும் பலியானார்கள்.
கடலூரில் ஆற்றில் சிக்கி சக்ரவர்த்தி (37) என்பவரும், குட்டையில் சிக்கி சிவசங்கர் (6) என்ற சிறுவனும், பண்ருட்டியில் வீடு இடிந்து மாணிக்கம்மாள் என்பவரும் பலியாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பேரன் என்பவர் மின்னல் தாக்கி பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 3 பேரும், தஞ்சை மாவட்டத்தில் 2 பேரும் பலியாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.